கடன் கலந்துரையாடல்களின் செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்பதால், நிதியத்தின் அனுமதிக்கான காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) இலங்கைக்கான அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் உதவி தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் உத்தியோகபூர்வமாக அனுமதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
விடயத்தை நன்னு அறிந்த இரண்டு செய்தி மூலங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்காக, 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக செப்டம்பரில் இலங்கை தெரிவித்த போதும் அண்மைய மாதங்களில் முன்னேற்றம் மந்த கதியிலேயே காணப்படுகிறது.
மேலும் கடந்த மாதம் இலங்கையின் நிதி அமைச்சர் இந்த கோரிக்கை ஜனவரி வரை நீட்டிக்கப்படலாம் என்று ஒப்புக்கொண்டார் என்றும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய கடன் வழங்குநர் நிதிகளை வழங்குவதற்கு முன்னர் இலங்கை கடனாளர்களிடமிருந்து முன் நிதியளிப்பு உத்தரவாதங்களைப் பெற வேண்டும் என்பதுடன், அதன் பெரும் கடன் சுமையை நிலையான பாதையில் வைக்க வேண்டும் என ஐ.எம்.எப் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பொது வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் இலங்கையின் மூன்று முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான், இந்தியாவை உள்ளடக்கிய கூட்டுப் பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் ஐ.எம்.எப் வலியுறுத்தியது.
இல்கை குறித்த கலந்துரையாடல்கள் குறித்து, ஐ.எம்.எப் ஒன்லைன் நாட்காட்டியில் டிசெம்பர் 22ஆம் திகதிவரை எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதில் 100% கவனம் செலுத்துவதாக விசாரணைக்கு பதிலளித்த இலங்கையின் நிதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.