Our Feeds


Thursday, December 15, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022: மொரோக்கோவின் உலகக் கிண்ண கனவை கலைத்த பிரான்ஸ் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜன்டீனாவை சந்திக்கிறது...!

 

தியோ ஹெர்னாண்டஸ், ரெண்டோல் கோலோ முவானி ஆகியோர் போட்ட கோல்களின் உதவியுடன் 2 - 0 என்ற கோல்கள் வித்தியசாத்தில் வெற்றியீட்டி, மொரோக்கோவின் உலகக் கிண்ண கனவை கலைத்த நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ், லுசெய்ல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனாவை சந்திக்கவுள்ளது.



கத்தார், அல் பெய்த் விளையாட்டரங்கில் புதன்கிழமை (14) நடைபெற்ற 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 5ஆவது நிமிடத்தில் தியோ ஹெர்னாண்டெஸ் போட்ட கோல் பிரான்ஸுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதலாவது ஆபிரிக்க மற்றும் அரபு நாடாக உலகக் கிண்ண அரை இறுதியில் பங்குபற்றிய மொரோக்கோ தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி அவ்வப்போது பிரான்ஸுக்கு சவால் விடுத்து  நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.



உபாதை காரணமாக அணித் தலைவர் ரொமெய்ன் சாய்ஸ் உட்பட ஓரிரு வீரர்களை மொரோக்கோ மாற்ற நேரிட்டபோதிலும் அவ்வணியின் ஆக்ரோஷம் குறையவில்லை. பிரான்ஸ் கோல் வாயிலை பல தடவைகள் ஆக்கிரமித்த மொரோக்கோவுக்கு கடைசிவரை கோல் போடுவதற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

மறுபுறத்தில் போட்டியின் 78ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் புகுந்த பிரான்ஸ் வீரர் கொலோ முவானி, களம்புகுந்த 44ஆவது செக்கனில் பந்தை தொட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே கோல் போட்டு பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார்.



உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்றில் மாற்று வீரர் ஒருவர் களம் புகுந்து இரண்டாவது மிகக் குறுகிய நேரத்தில் போட்ட கோல் இதுவாகும். 1998 உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்றில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக களம் புகுந்த டென்மார்க்கின் எபே செண்டே 28 செக்கன்களில் போட்ட கோலே மிக குறுகிய நேரத்தில் போடப்பட்ட கோலாக வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ளது.



ஆரம்பம் முதல் கடைசிவரை பிரான்ஸின் வேகம் கலந்த விவேகத்திற்கும் மொரோக்கோவின் வேகம் கலந்த ஆக்ரோஷத்திற்கும் இடையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியின் 5ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப்பே கோல் போட எடுத்த அடுத்தடுத்த 2 முயற்சிகள் தடுக்கப்பட்டன. இரண்டாவதாக தடுக்கப்பட்ட பந்து ஹெர்னெண்டஸின் பாதத்தை நோக்கிச் செல்ல அவர் மிக இலகுவாக கோலினுள் புகுத்தி பிரான்ஸை முன்னிலையில் இட்டார்.



போட்டியின் 78ஆவது நிமிடத்தில் எம்பாப்பே பரிமாறிய பந்து மொரோக்கோ வீரரின் காலில் பட்டு கோலோ முவானியை நோக்கிச் செல்ல அவர், பிரான்ஸின் 2ஆவது கோலைப் போட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த வெற்றியுடன் 6ஆவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட பிரான்ஸ் தகுதிபெற்றுக்கொண்டது. மேலும் 60 வருடங்களின் பின்னர் பிரேஸிலுக்கு (1958, 1962) அடுத்ததாக இரண்டாவது நாடாக  உலகக் கிண்ணத்தை   தக்கவைக்க நடப்பு சம்பியன் பிரான்ஸ் முயற்சிக்கவுள்ளது.

பிரான்ஸின் வெற்றியை அல் பெய்த் அரங்கில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட பிரமுகர்களுக்கான பகுதியில் இருந்தவாறு கொண்டாடி மகிழ்ந்த அந் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரொன், கரகோஷம் செய்த தனது நாட்டு வீரர்களைப் பாராட்டினார். அவருடன் பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனோ, பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் நொயல் லே கெரத் ஆகியோரும் போட்டியைக் கண்டு களித்தனர்.



அரை இறுதிப் போட்டியின்போது மொரோக்கோ அணியில் சில வீரர்கள் உபாதைக்குள்ளானதால் அதன் திட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

உபாதை காரணமாக கால் இறுதிப் போட்டியில் விளையாடாமல் இருந்த பின்கள வீரர் நயெப் ஒகேர்ட் அணிக்கு மீளழைக்கப்பட்டபோதிலும் அவர் பூரண குணமடையாததால் கடைசி நிமிடத்தில் இறுதி அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவரது இடத்தை அஷ்ரப் தாரி நிரப்பினார்.

போதாக்குறைக்கு அணித் தலைவர் ரொமெய்ன் சாய்ஸ், உபாதையினால் அவதியுற்றதால் 21 நிமிடங்களில் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மாற்றுவீரர்  சலிம் அமல்லா களம் புகுந்தார்.

அப்போது மொரோக்கோ ஒரு கோல் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்தபோதிலும் அவ்வணியின் ஆக்ரோஷம் கடைசிவரை குறையவில்லை.

பல தடவைகள் பிரான்ஸ் கோல் எல்லையை மொரோக்கோ வீரர்கள் ஆக்கிரமித்து எதிரணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், அவசியமான வேளைகளில் எல்லாம் பிரான்ஸ் வீரர்கள் பின்களத்தைப் பலப்படுத்தி தமக்கு எதிராக கோல் போடப்படுவதைத் தடுத்தனர்.

அணித் தலைவரும் கோல்காப்பாளருமான ஹியூகோ லோரிஸும் மிகத் திறமையாக செயற்பட்டு எதிரணியின் பல முயற்சிகளைத் தடுத்து இரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.

இது இவ்வாறிருக்க, இந்த வருட உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் மொரொக்கோவுக்கு எதிராக அதன் 5 போட்டிகளில் எதிரணி வீரர்களால் கோல் போட முடியாமல் போனது. ஆனால், அரை இறுதியில் பிரான்ஸ் வீரர்களே அவ்வணிக்கு எதிராக இந்த உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக கோல்களைப் போட்டனர்.

முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் ஒருவர் போட்டுக்கொடுத்த சொந்த கோல் ஒன்றே கனடாவுக்கு இனாமாக கிடைத்திருந்தது.

இதேவேளை, அரை இறுதிகளில் ஆர்ஜன்டீனாவிடம் தோல்வி அடைந்த குரோஏஷியாவுக்கும் பிரான்ஸிடம் தோல்வி அடைந்த மொரோக்கோவுக்கும் இடையிலான மூனறாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டி தோஹா, கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (17) நடைபெறவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »