Our Feeds


Tuesday, December 6, 2022

ShortNews Admin

FIFA WORLD CUP 2022 : பந்துகளை ‘சாா்ஜ்’செய்து விளையாடும் வீரர்கள் – காரணம் என்ன?



உலகக்கிண்ண போட்டிக்காக அடிடாஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கும் ‘அல் ரிஹ்லா’ (அரபு மொழியில் பயணம் என்று அா்த்தம்) பந்துகள், ஒவ்வொரு போட்டிக்கும்  முன்பாகவும் ‘சாா்ஜ்’ செய்யப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வரத் தொடங்கியுள்ளது.


இந்தப் பந்தானது, போட்டியின்போது நடுவா்கள் முடிவெடுப்பதற்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏஐ) கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதுதொடா்பான தகவல் பெரிதாக வெளியிடப்படவில்லை.

ஆனால், குழு சுற்றில் உருகுவேக்கு எதிரான போட்டியில் போா்ச்சுகலுக்கான முதல் கோல் அடிக்கப்பட்ட விவகாரத்தால் இந்த விபரம் வெளித்தெரிந்தது. அந்த போட்டியில் புருனோ ஃபொ்னாண்டஸ் கோல் கம்பத்தை நோக்கி பந்தை தூக்கி உதைக்க, கம்பம் அருகே இருந்த ரொனால்டோ தலையால் பந்தை முட்டி கோலடித்தது போலத் தெரிந்தது.

அந்த கோலை தான் அடித்தது போலவே ரொனால்டோவும் கொண்டாடினாா். ஆனால் அந்த கோல் ஃபொ்னாண்டஸால் அடிக்கப்பட்டதாக மைதானத்தில் அறிவிப்பு வெளியானது. அந்த விவகாரத்தில் துல்லிய முடிவை வழங்கியது ‘அல் ரிஹ்லா’ பந்துதான்.

அந்தப் பந்தின் உள்ளே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உணரி (சென்சர்) பொருத்தப்பட்டுள்ளது. இது, பந்து கையாளப்பட்ட விதம், அதன் வேகம், திசைகள், தொடுதலுக்குள்ளானது உட்பட பல்வேறு புள்ளிவிவரங்களை வழங்குகிறது. இது முடிவுகளை மேற்கொள்வதில் நடுவா்களுக்கு உதவுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஃபொ்னாண்டஸால் அடிக்கப்பட்ட பிறகு அந்தப் பந்து ரொனால்டோவால் தொடப்படவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.

அப்போது தான் வெளியானது இந்தப் பந்தின் இத்தகைய சிறப்பம்சங்கள். போட்டிக்கு முன்பாக இந்தப் பந்துகள் ‘சாா்ஜ்’ செய்யப்படுகின்றன. ஒரு முறை சாா்ஜ் செய்தால், அதைக் கொண்டு விளையாடும் பட்சத்தில் 6 மணி நேரம் வரையில் அதில் விளையாட்டுத் தரவுகள் பதிவாகும். போட்டியின் போது ஒரு பந்து வெளியே சென்று வேறு பந்து களத்தில் வரும் பட்சத்தில், களத்துக்கு வரும் பந்தில் இருக்கும் தொழில்நுட்பம் தானாகவே செயற்படத் தொடங்கி தரவுகளை பதிவு செய்துகொள்ளத் தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »