(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீது தாக்குதல் நடாத்தி, தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களான தானிஸ் அலி மற்றும் அனுருத்த பண்டார ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்தது.
செவ்வாய்க்கிழமை (டிச. 27) முற்பகல் குறித்த இருவரும் கொழும்பு - கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில், குறித்த இருவரிடமும் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விருவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கொழும்பு - 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது, கடந்த ஜூலை 9 ஆம் திகதி தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு முன்னெடுத்துள்ளது.
இந்த விடயத்தில் பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.