விமானப் பணிப்பெண்களை நியமிக்கும் நிறுவனம் என்ற போர்வையில் இணையதளத்தில் நேர்காணல் நடத்தி அழகான பெண்களின் நிர்வாண புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பாலியல் இலஞ்சம் வாங்க முயன்ற ஒருவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹங்குரான்கெத்த பிரதேசத்தில் வசிக்கும் நீர் வழங்கல் சபையின் மின்மானி வாசிப்பவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துக்கு முகங்கொடுத்த மாத்தளை மற்றும் கண்டியில் வசிக்கும் இரண்டு யுவதிகளிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சதுரி திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன் நான்கு கையடக்கத் தொலைபேசிகள், 13 சிம் அட்டைகள் மற்றும் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.