இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனோரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (டிச.16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து, காணாமல் போனோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த மனு மீதான விசாரணைகளின் போது, இராணுவத்திடம் சரணடைந்து, காணாமல் போனோரை அடுத்த தவணையின் போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும், அவ்வாறு இல்லையென்றால், காணாமல் போனமைக்கான காரணத்தை தெளிவூட்டுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்ணவேல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
”இறுதிக் கட்ட யுத்தத்தில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய வழக்குகள் பல விசாரணைக்கு வந்திருந்தன. அவற்றில் முதல் ஐந்து வழக்குகளின் தீர்ப்பு வவுனியா நீதிமன்றத்தில் இன்று விடப்பட்டன. இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று அதன் பின்னர் நீதவானின் அறிக்கையின் பிரகாரம் மேல்நீதிமன்றத்திற்கு வந்தது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விளக்கத்தில் எல்லா மனுதாரர்களும் தமது சாட்சியத்தையளித்து பின்னர் இராணுவம் சார்பாகவும் சாட்சியம் அளிக்கப்பட்டது. குறித்த இராணுவ அதிகாரி சாட்சியம் அளிக்கும் போது சரணடைந்தவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக கூறியிருந்தார்.
எனினும் குறித்த பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பின்னர் இந்த வழக்கு மேல்நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு இன்று முதலாவது வழக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதன் பிரகாரம் மனுதாரர் முகாமில் இருக்கும் போது சரணடைந்தவர்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள் என்று வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் தன்னுடைய கணவரை சரணடைய செய்து அதன் பின் தன்னுடைய கணவர் மற்றும் பலருடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் அடைக்கப்பட்டு இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டார் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
எனவே இறுதியாக அந்த மனுதாரரின் கணவர் அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்தின் மத்தியில் தான் இருந்தார். அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதே சமயத்தில் அதனை எதிர்த்த இராணுவ தரப்பினர் அது தொடர்பான திருப்திகரமான பதிலையும் முன்வைக்கவில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்தது. அதாவது காணாமல் ஆக்கப்பட்ட நபர் இராணுவத்திடம் சரணடையவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் இருந்தது.
ஆனால் பொறுப்பை அவர்கள் சரிவர தங்களுடைய சாட்சியங்கள் மூலம் காண்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கருதியது. எனவே மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம் ஆட்கொணர்வு மனுவினுடைய எழுத்தாணையை நீதிமன்றம் அனுமதித்து, அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவர் காணாமல் போனமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயத்தில் இன்னுமொரு வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை நீதிமன்றின் முன்பு சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. அடுத்த மூன்று வழக்குகளும் வருகின்ற வருடம் ஜனவரி 27ஆம் திகதி நீதிமன்றத்தில் கூப்பிடப்பட்டு அதன் தீர்ப்பு வழங்கப்படும்” என சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்ணவேல் தெரிவித்துள்ளார்.