Our Feeds


Tuesday, December 20, 2022

ShortNews Admin

பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் திறக்கப்படமாட்டாது - அரசாங்கம் அதிரடி அறிவிப்பு



(எம்.மனோசித்ரா)


இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி, நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மகாநாயக்க தேரர்களினால் திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் வரை இப்பல்கலை கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்காமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (டிச.20) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் ஹோமாகமையில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பிலும், பகிடிவதைகள் மற்றும் அவற்றால் ஏற்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகமானது தேரவாதத்தின் அடிப்படையின் பௌத்த சாசனங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதாகும். எனினும் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதன் இலக்கிற்கும் அப்பால், ஏனைய பல்கலைக்கழகங்களை விட மோசமான வகையில் பகிடிவதைகள் அதிகரித்துள்ள மோசமான ஒரு இடமாக இந்த பல்கலைக்கழகம் காணப்படுகிறது.

எனவே மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பௌத்த மதத் தலைவர்களினதும் திருத்தங்கள் கிடைக்கப் பெறும் வரையில், மீண்டும் இந்த பல்கலைக்கழகத்தை திறப்பதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான அறிக்கையைப் பெற்றுக் கொண்டு, சகல மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த மதத் தலைவர்களின் முழுமையான தலையீட்டுடனான திருத்தங்கள், நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இப்பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும்.

அதுவரையில் பல்கலைக்கழக செயற்பாடுகள் மாத்திரமின்றி தங்குமிட விடுதிகளும் மூடப்படும். கல்வி அமைச்சிற்குரிய சட்டத்தின் கீழ் கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலேயே குறித்த பல்கலைக்கழகத்தில் பதிவாகியுள்ள பகிடிவதைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அங்கீகாரமளிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு.

பல்கலைக்கழகங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காணப்படுகிறது. எனினும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று சாதாரணமானவையல்ல. இப்பல்கலைக்கழகம் பிரத்தியேக சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். எனவே இதன் தனித்துவத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது. அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »