(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு தற்போதுள்ள எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறுகிய காலத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை 3 பில்லியன் டொலராக அதிகரிக்கா விட்டால் எம்மால் மட்டுமல்ல எவராலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஊடகத்துறை,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம்,உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு,ஆகவே தற்போதைய நிதி நெருக்கடிக்கு பாராளுமன்றம் ஒன்றிணைந்த வகையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் வரி அதிகரிப்பு செய்கிறது அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என குறுகிய அரசியல் நோக்கத்தில் பார்க்காமல் நாட்டில் என்ன நடக்கின்றது உண்மையில் என்ன நடந்துள்ளது என்பதை சிந்தித்து எதிர்க்கட்சி செயற்பட வேண்டிய காலத்தின் தேவையாக உள்ளது.
நாடும் நாட்டு மக்களும் இறுதிக் கட்ட பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக மட்டுமன்றி பாரிய பொறுப்பினை ஏற்று செயல்படுகிறார்.அரசியல் கட்சி பேதம் இன்றி அதனை உணர்ந்து அவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் கை நீட்டாமல் நாட்டுக்கு ஏன் இவ்வாறு நடந்தது என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.நாட்டில் மஹிந்த ராஜபக்ச யுகம் வரை 20 வீதத்திற்கு குறைந்த பொருளாதார வருமானமே காணப்பட்டது.
தொடர்ச்சியாக நாட்டின் வருமானம் குறைவடைந்து வரும் நிலையில் அதற்கான பொறுப்பு நிதியமைச்சருக்கு மாத்திரம் கிடையாது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஏன் அது தொடர்பான விசாரணை நடத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு ஏன் அவர்களிடம் அது தொடர்பில் கேள்விகள் எழுப்பவில்லை எனக் கேட்க விரும்புகின்றேன்.
நாட்டில் தற்போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு 1002 பில்லியன் ரூபா அவசியமாகிறது. அதேபோன்று கடன் வழங்குவதற்காக 2193 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
இவை இரண்டுக்கும் மாத்திரமே 3195 ரூபா செலவிட வேண்டி யுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு வரி மூலம் 3130 பில்லியன் ரூபா மட்டுமே கிடைக்கும்.இதனைக் கொண்டு எவ்வாறு நாட்டை முன்னெடுத்துச் செல்வது?
எவ்வாறெனினும் அடுத்த வருடத்தில் நாம் 3130 பில்லியனை அரச வருமானத்தை எதிர்பார்க்கின்றோம் அதனைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?வளங்களை விற்றாவது இதனை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது.வரலாற்றில் எல்லாக் காலங்களிலுமே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் காலத்தில் நாட்டின் பெருமளவு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன அவ்வாறு விற்று தான் அவர் நாட்டை முன்னெடுத்துச் சென்றார் என்பதை சகலரும் அறிய வேண்டும்.
பூகொட நிறுவனம், துல்கிரிய, புஹாரி ஹோட்டல் நிறுவனம், சிலோன் லெதர் கம்பெனி, களனி டயர் நிறுவனம், ஹிங்குரான சுகர் கம்பெனி, பீப்பள்ஸ் மேச்சர்ன்ட், கொழும்பு இன்டர்நேஷனல் ஸ்கூல் உட்பட 94ம் ஆண்டு வரை 84 நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு மாற்று வழி கிடையாது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக விமர்சிப்பவர்கள் போலன்றி இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. எவ்வாறாயினும் எமது வெளிநாட்டு கையிருப்பை மூன்று பில்லியன் டொலராக அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
கடந்த அரசாங்க காலத்தில் வரிகுறைப்புகள் இடம் பெற்றுள்ளன.குறிப்பாக சீனி வரி 25 சதமாக குறைக்கப்பட்ட போது வர்த்தக அமைச்சர் என்ற வகையில் நான் அது தொடர்பில் அறிந்திருக்கவில்லை.
வரி குறைப்பு செய்யப்பட்ட போது நான் அபயராம விகாரையில் இருந்தேன்,ஊடகம் ஒன்றின் மூலமே அதனை என்னால் அறிய முடிந்தது. அது தொடர்பில் நான் அமைச்சரவையில் பெரும் விவாதத்தில் ஈடுபட்டேன். ஜனாதிபதியுடன் தர்க்கம் செய்தேன்.
எனினும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவரது அந்த நிலைப்பாட்டில் இருந்து அவரை விலக வேண்டாம் என அவருக்கு ஆலோசனை வழங்கினர்.இறுதியில் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது.
2000 ஆண்டில் இருந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அது அதிகரித்திருந்தால் நாட்டின் தேசிய உற்பத்தி அதிகரிக்கும் போது நாட்டி வருமானம் தொடர்ந்து குறைவடையுமானால் அது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஏன் விசாரணை நடத்தவில்லை என கேட்க விரும்புகின்றேன்.
அமைச்சருக்கு அன்றி பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கே அதற்கான பொறுப்பு உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.