வட கொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.
கிம் ஜாங் உன்னின் தந்தையும், வட கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி, இந்த தடை அங்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்த தடையை மீறுவோருக்கு சிறைத் தண்டனை, நாடு கடத்துதல் போன்ற தண்டனைகள் கிடையாது. நேரடியாக தூக்கு தண்டனைதான் என வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிம் குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கிம் ஜாங் உன் ஜனாதிபதியாக பொறுப்பேற்று வட கொரிய மக்களை வதைத்து வருகிறார்.
அந்த நாட்டை பொறுத்தவரை, அரசுக்கு விருப்பமானதை தான் மக்கள் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. இன்றைய நாள் முழுவதும் மக்கள் ஒரு வேளைக்கு மாத்திரமே உணவருந்த வேண்டும் என ஜனாதிபதி கூறினால், அதையும் மக்கள் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கூத்தும் கடந்த ஆண்டு வட கொரியாவில் நடந்தது.
பஞ்சம் காரணமாக இந்த கட்டுப்பாடை சில வாரங்களுக்கு அந்நாடு நடைமுறைப்படுத்தியது. அதேபோல், அரசு தொலைக்காட்சி மாத்திரமே அங்கு மக்களின் பொழுதுபோக்கு. அதிலும் கிம் ஜாங் உன்னின் புகழ்தான் பாடப்படும். இணையதள வசதி, திரைப்படங்கள் என எதுவும் வட கொரியாவில் கிடையாது.
இந்நிலையில், ஆண்டுதோறும் 10 நாட்கள் வட கொரிய மக்களுக்கு மிக சோதனையாக காலக்கட்டம் என்றே கூற வேண்டும். ஏனெனில், ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி நாடே துக்கத்தை அனுசரிக்க வேண்டும் என்ற விசித்திர நடைமுறை கடந்த 10 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 11-வது ஆண்டாக அந்த துக்க காலம் வட கொரியாவில் வந்துள்ளது. கிம் ஜாங் மரணம் அடைந்த 11-வது துக்க தினம் டிசம்பர் 17 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்த துக்க தினம் ஒரு நாள் அல்ல.. அடுத்த 10 நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படும்.
அந்த வகையில், அடுத்த 10 நாட்களுக்கு அதாவது ஜனவரி 7 ஆம் திகதி வரை வட கொரிய மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. கூட்டமாக சேர்ந்த வெளியே போகக் கூடாது. பொழுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாடக் கூடாது. மொத்தத்தில் அனைவரது வீட்டிலும் இறப்பு நிகழ்ந்ததை போல சோகம் தொய்ந்த முகத்துடன் அலுவலகங்கள், பாடசாலை, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். பாடசாலை, கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
இதை விட கொடுமை என்னவென்றால், அந்த நாட்களில் யார் வீட்டிலாவது மரணம் நிகழ்ந்தால், அவர்கள் வாயை மூடிக் கொண்டுதான் அழ வேண்டும். சத்தம் வெளியே வந்தால் முடிந்தது கதை. சடலத்திற்கு அருகே மற்றொரு சடலமாக அவர்கள் படுக்க வேண்டியதுதான்.
இந்த விதிகளை மீறியவர்கள் கடந்த காலங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதற்கு பிறகு அவர்களை யாராலும் பார்க்க முடியவில்லை. அவர்கள் குறித்த தகவலும் அரசு தரப்பில் இருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதை நாம் கூறியும் தெரிய வேண்டுமா என்ன?