அமெரிக்காவின் பிரபல விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் கிராண்ட் வால், ஆர்ஜென்டீனா- நெதர்லாந்து கால் இறுதிப் போட்டியை அரங்கிலிருந்து நேரில் பார்த்துக்கொண்டிருந்தபோது மயங்கிவீழ்ந்து உயிரிழந்தார்.
48 வயதான கிராண்ட் வால் (Grant Wahl), கால்பந்தாட்டத்துறையில் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ஆவார்.
கடந்த உலகக்கிண்ண போட்டியொன்றை பார்வையிட அரங்குக்கு சென்றபோது, தான் வானவில் நிறங்களைக் கொண்ட ரீஷேர்ட் அணிந்திருந்ததால் கத்தாரிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தடுத்துவைத்திருந்தாகவும் பின்னர் அதிகாரிகள் தன்னை அரங்குக்குள் செல்ல அனுமதித்ததாகவும் அவர் கூறினார். இவ்விடயம் உலகம் முழுவதும் செய்தியாகியிருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆர்ஜென்டீனா- நெதர்லாந்து போட்டியின் இறுதிக்கட்டத்தில், அரங்கின்; ஊடகவியலாளர் பகுதியிலிருந்த கிராண்ட் வோல் மயங்கி வீழ்ந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். எனினும் இன்று காலை அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் வாலின் மரணத்துக்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கிராண்ட் வாலுக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கிராண்ட் வாலின் சகோதரர் எரிக் வால் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனவும் கிராண்ட் வால் வானவில் நிற ஆடை அணிந்தமைக்கு தானே காரணம் எனவும் எரிக் வோல் கூறியுள்ளார்.