(இராஜதுரை ஹஷான்)
விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பிரபலங்கள் வெளியில் சுதந்திரமாக உள்ள போது 31 விடுதலை புலிகளை தொடர்ந்து சிறையில் தடுத்து வைப்பது பயனற்றது.
ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுத்தியுள்ளேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
யதார்த்த நிலைக்கு அமைய தீர்மானம் எடுக்கும் சூழல் தோற்றம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டி நகரில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற 43ஆவது படையணியின் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
நிகழ்காலத்தில் காணப்படும் பிரச்சினையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல முடியாது. மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
நாட்டில் முதலாவது அரசியல் கட்சி தோற்றம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
அவர்களுக்கு அரசியல் அபிலாசைகள் உள்ளன எனக் குறிப்பிட்டுக் கொண்டு பொன்னம்பலம் இராமநாதன் இலங்கை தேசிய சங்கத்தில் இருந்து விலகி தமிழ் மக்கள் சபை என்பதொன்றை ஸ்தாபித்தார்.
பொன்னம்பலம் இராமநாதன் அரச அதிகாரம் 50:50 பகிரப்பட வேண்டும் என குறிப்பிட்டார். எஸ்.டி. செல்வநாயகம் தனி இராச்சியம் அமைக்க சமஷ்டி முறைமையை கோரினார்.
இவ்வாறான தன்மை காலம் காலமாக இடம்பெற்றது. பிரபாகரன் பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக பலவந்தமான முறையில் தனி இராச்சியத்தை அமைக்க முயற்சித்தார். ஆகவே இலங்கையின் அதிகார பகிர்வில் இவ்வாறான பின்னணி காணப்படுகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா ஆரம்பத்தில் இருந்து அவதானம் செலுத்தியுள்ளது. இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது அரசியலமைப்பில் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் யதார்த்தத்துக்கு சாதகமான விடயங்களை செயற்படுத்த வேண்டும். நாடு வங்குரோத்து நிலை அடைந்ததன் பின்னர் இலங்கை மக்கள் இன, மத பேதமில்லாமல் படகு ஊடாக நாட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்கள். வசதி படைத்தவர்கள் விமான நிலையங்களை நோக்கி செல்கிறார்கள்.
விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய பிரபலங்களான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட தரப்பினர் வெளியில் சுதந்திரமாக உள்ள போது 31 விடுதலை புலிகள் போராளிகளை தொடர்ந்து சிறையில் தடுத்து வைப்பது பயனற்றது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்ட தரப்பினர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்து இந்த பிரச்சினையை மறக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.தொல்பொருள் மற்றும் வனவளபாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.