நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர முகாமைத்துவம் மற்றும் ஒழுக்கம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) சபையில் கேள்வி எழுப்பினார்.
“ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக எழுந்து பேசுகிறார்கள். இவர்கள் சபையில் மிகவும் ஒழுக்கமற்ற குழுவினராவர்” என்று சபாநாயகர் இதன்போது கூறினார்.
இதனையடுத்து “சபையின் ஒழுக்கத்தை பேண வேண்டியவர் சபைத் தலைவர்தான்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்க்கட்சியினர் காலை நேரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணடிப்பதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க கூறியதையடுத்து விவhதம் ஆரம்பமானது.
“எதிர்க்கட்சிகள் காலை நேரத்தில் கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணடிக்கின்றன, தொலைக்காட்சி செய்திகளில் அவர்கள் பேச்சு ஒளிபரப்பப்படும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். இதன் காரணமாக எம்.பி.க்கள் பேசும் நேரத்தை இழக்கின்றனர். இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசும் நேரம் கூட குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினையின் விளைவாக நாங்கள் இறுதி நேரத்தை நீடிக்க வேண்டியிருந்தது” என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.