(இராஜதுரை ஹஷான்)
நாட்டை முன்னேற்றுவதே எமது பிரதான இலக்கு. எமது கட்சி கொள்கையுடன் இணக்கமாக செயல்படும் தரப்பினருடன் கூட்டணி அமைப்போம்.
தேர்தலுக்கு அச்சமடைந்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் பொய்யாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இவ்வருடத்தின் இறுதி பகுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் ஒருசிலர் பொய்யாக வழக்கு தாக்கல் செய்து இல்லாத பிரச்சினையை தற்போது தோற்றுவித்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் தரப்பினர் தான் தற்போது தேர்தலுக்காக குரல் கொடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார்கள்.
தேர்தலை பிற்போட வேண்டிய பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது,தேர்தல் எப்போது இடம்பெற்றாலும் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
நாட்டை முன்னேற்றுவது பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான கொள்கையாக உள்ளது.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எந்த தரப்பினருடனும் கூட்டணியமைக்க தயார் என்பதை அறிவித்துள்ளோம்.கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையலாம் என்றார்.