(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம்.
குறுகிய காலத்துக்குள் மக்கள் பலத்துடன் வளர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க இடமளிக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனம் கொழும்பு - கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கோட்டா கோஹோம், பசில் கோஹோம் என்கிற பெரிய புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி செய்தது. குறுகிய காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டுக் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றி கிடைத்தது.
இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க கோழைகள் சதி செய்கிறார்கள். ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன். எங்களை அழிக்க நினைப்பவர்கள் மக்களோடு இணைந்து எங்களை அழித்து தோற்கடித்துக்காட்டுங்கள்.
அரசாங்கத்துக்குள்ள தீர்வு மின், நீர் கட்டணங்களை அதிகரிப்பதல்ல. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை.
அதற்காக அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாது. அவர்களின் தொழில் உரிமை காதுகாக்கப்படவேண்டும் . அரச, , தனியார் கூட்டுமுயற்சிகளின் ஊடாக நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமடையச் செய்யலாம் .
மேலும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சிக்குள் பிளவுபடாத இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர நடவடிக்கை எடுப்போம். அதேபோல் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பில் அடைப்படை உரிமைக்குள் சேர்ப்போம். மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்காக மக்களோடு ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை.
மேலும் எமது அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியப் புதியச் சட்டம் கொண்டுவருவோம். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொடவை தாராளவாதிகள் மறந்துவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.
நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை மீள நாட்டுக்குக் கொண்டுவருவேன். அத்துடன் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
போராட்டத்தால் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பக்கமாக ஐக்கிய மக்கள் சக்தி நிற்பது மாத்திரமன்றி, போராட்டக்காரர்களால் முன்னெடுத்தப் புரட்சியை கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்
எனவே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியுமான நாட்டுக்கு உள்ள ஒரே தீர்வு, ஒரே மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.