போதைப்பொருட்களை இலவசமாக விநியோகித்து இலங்கையை சீரழிப்பதற்கு வெளிநாட்டு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.
போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிரான சட்டங்கள் இனி கடுமையான முறையில் செயல்படுத்தப்படும். ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு முழுமையாக அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களாக வரையறுக்கப்படும் நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை கடந்த காலங்களை காட்டிலும் தற்போது தீவிரமடைந்துள்ளது. உயர் பாடசாலைகள் முதல் கீழ்நிலை பாடசாலைகள் வரை ஐஸ் எனும் போதைப் பொருள் புகுந்துள்ளது.
மகளிர் பாடசாலைகளுக்குள்ளும் இது நுழைந்துள்ளது. இதனை தடை செய்வதற்கான சட்டமூலத்தை முன்வைத்துள்ளோம். ஐஸ் எனும் போதைப் பொருளுக்குள் அடிமையானவருக்கு இரண்டு வருடங்களே வாழ்க்கை இருக்கும்.
நாட்டில் 5 இலட்சம் வரையிலான இளைஞர் யுவதிகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர். இது தொடர்பில் கடுமையான சட்டங்களை எடுக்காவிட்டால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கால் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போய்விடும். இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இளைஞர், யுவதிகள் இல்லாது போகலாம்.
முழுமையாக இந்த நாட்டை சீரழிப்பதற்கு சூழ்ச்சிகள் நடப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. புலனாய்வு தகவல்களுக்கமைய வெளிநாட்டில் இருந்து எமது நாட்டுக்கு இலவசமாக போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு அடிமையானதும் எமது இனங்கள் முழுமையாக இல்லாது போய்விடும். இதற்கான வெளிநாட்டு சூழ்ச்சிகள் உள்ளன.
எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினையை விடவும் போதைப் பொருளால் ஏற்படக் கூடிய பிரச்சினை பாரதூரமானது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை ஏடுக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக சட்டங்கள் இனி கடுமையாக்கப்படும் என்றார்.