கொழும்பு, கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது விபத்தை ஏற்படுத்தி விட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்ற சொகுசு காரின் சாரதியை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்ற நீதவான் வை.பிரபாகரன், இன்று (13) உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை (10) காலை கொள்ளுபிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய ஓட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சொகுசு காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர், அன்றைய தினம் காலை 9.55 மணியளவில் டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு (12) 9.50 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர், குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பின்னர், கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.