(எம்.வை.எம்.சியாம்)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழித்து பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப அதனை மீண்டும் உருவாக்குவது ராஜபக்ஷக்களின் கனவுகளில் ஒன்றாக காணப்பட்டது.
அவர்கள் ஆட்சிக்கு வரும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எவரும் திருடவில்லை. ஆட்சியில் இருந்தவர்கள் திருடியமையே நாடு இன்று வங்குரோத்து அடைய மிக முக்கிய காரணம் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
எதிர்காலத்திற்கான மாற்றம் என்ற தொனிப்பொருளில் குருநாகல் பகுதியில் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இன்று எமது நாட்டில் சுமார் 33 வீதமானவர்களுக்கு தொழில் இல்லை. பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்துள்ளது. முதற் தடவையாக இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டதாக சர்வதேசத்திற்கு அறிவித்தது. பயணம் செய்வதற்கு எரிபொருள் இல்லை. உண்பதற்கு உணவில்லை. மின்சாரம் இல்லை. கல்வி செயற்பாடுகள் பூச்சிய மட்டத்திற்கு சென்று விட்டது.
இந்த நாட்டில் அரசியலவாதிகளின் செயற்பாடுகள் முற்றிலும் பிழையானவை. ஆட்சியில் இருந்தவர்கள் திருடியமையே நாடு இன்று வங்குரோத்து அடைய காரணமாகும். இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்டவற்றில் மோசடிகள் இடம்பெற்றன.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் வரை ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும் மோசடியில் ஈடுபட்டனர். அன்று நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயல்திட்டத்தை நானே ஆரம்பித்தேன்.
ராஜபக்ஷ அதில் 15 பில்லியனை ரூபாய் வரையில் கையாடல் செய்தார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற திருட்டு ராஜபக்ஷவின் மனைவி செய்த மிகப்பெரிய மோசடியாகும்.
இவ்வாறான திருட்டுக்கள் காரணமாக இன்று எந்த நாடும் வங்குரோத்து அடையாத அளவிற்கு இலங்கை வங்குரோத்து அடைந்துள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழித்து பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப அதனை மீண்டும் உருவாக்குவது ராஜபக்ஷக்களின் கனவுகளில் ஒன்றாக காணப்பட்டது.
அவர்கள் ஆட்சிக்கு வரும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எவரும் திருடவில்லை நாட்டில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. அதில் பெரும்பான்மை பலத்துடன் காணப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பராளுமன்றத்தில் 6 கட்சிகளாக பிரிந்து செயற்படுகிறது. அதில் பெரும்பாலனவர்களை ராஜபக்ஷ அழைத்து சென்று விட்டார்.
எதிர்காலத்தில் நாட்டை மீட்டெடுக்க இளைஞர்களுடைய பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டங்கள் இதனை நன்கு உணர்த்தியது.
கடந்த 74 வருடங்களாக நாட்டு மக்கள் ஆட்சியாளர்களை பதவியில் அமர்த்தினாலும் அவர்கள் மக்களை ஏமாற்றி ஊழல் மற்றும் மோசடி, கொலை, கொள்ளையில் ஈடுபட்டு நாட்டையே முற்றாக இல்லாது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாட்டை கட்டியெழுப்ப கூடிய பொருத்தமான தலைவர் ஒருவர் இல்லாத நிலையே இன்று காணப்படுகிறது.
நாட்டை கட்டியெழுப்ப புதியதொரு அரசியல் கலாசாரம் மற்றும் மாற்றமொன்று தேவைப்படுகிறது. மேலும் புதியதொரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது. புதிய திட்டங்கள், கொள்ளைகளை கொண்ட தலைவர் ஒருவர் தேவைப்படுகிறார். அரசியலமைப்பில் புதிய மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது என்றார்.