உலகக் கிண்ண வெற்றியின்பின், பயிற்றுநர் லயனல் ஸ்காலோனி, அணித்தலைவர் மெஸி உட்பட ஆர்ஜென்டீன குழாத்தினர் 'ஏரோலைனியாஸ் ஆர்ஜென்டீனா' நிறுவனத்தின் விசேட விமானம் மூலம், இத்தாலியின் ரோம் வழியாக ஆர்ஜென்டீனாவுக்கு சென்றனர்.
தலைநகர் புவனேர்ஸ் அயர்ஸஸிலுள்ள எஸேய்ஸா விமான நிலையத்தில் இன்று செவ்வாய் அதிகாலை 2.00 மணியளவில் ஆர்ஜென்டீன அணியினர் வந்திறங்கினர்.
அதன்பின் விமான நிலையத்திலிருந்து ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கத்தின் கட்டடத்தொகுதியை நோக்கி அணியினர் திறந்த பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிகாலை வேளையிலும் பெரும் எண்ணிக்கையான ரசிகர்கள், வீதியின் இருபுறமும் திரண்டிருந்தனர்.
இரட்டைத் தட்டு பஸ்ஸின் திறந்த மேல் தளத்திலிருந்து வீரர்கள் பயணம் செய்தனர்
அணித் தலைவர் லயனல் மெஸி பஸ்ஸின் பிற்பகுதியில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்தார். அவரின் அருகில், ஏஞ்சல் டி மரியா, லியான்ட்ரோ பரேடெஸ், நிக்கலஸ் ஒட்டாமேன்டி. ரொட்றிகோ டி போல் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
அப்போது வீதிக்கு குறுக்காக காணப்பட்ட கம்பியில் மெஸி உட்பட வீணமேற்படி 5 வீரர்களும் மோதப்படக்கூடிய அபாய நிலை காணப்பட்டது. எனினும், கடைசி விநாடியில் அக்கம்பியை அவதானித்து வீரர்கள் ஐவரும் குணிந்துகொண்டனர். இதனால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கத்தின் கட்டடத்தொகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள், உள்ளூர் நேரப்படி இன்று செவ்வாய் நண்பகல் தலைநகரின் மத்திய பகுதிக்கு திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு வரவேற்கப்படவுள்ளனர்.