வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட, கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினையாகி விடக்கூடாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள், இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கும் அதிகாரம் என்ன? இதுபற்றி அவர்கள் மனம் திறப்பது அவசியம். சூழ்நிலையைச் சமாளிக்கும் அறிக்கைகள் விடாமல், முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது.
இதே நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளமை ஏற்புடையதல்ல. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிந்திருக்க வேண்டுமா? என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருப்பாரேயானால்,வடக்கு ,கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்விடயங்கள் தொடர்பில், ஹக்கீமுக்கும், சுமந்திரனுக்கும் இதுவரை காலமும் இரகசியமாக நடாத்தப்பட்ட பேச்சுக்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம். இவ்விரு மாகாணங்களும் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறினால்,அந்தந்த மாகாணங்களில் அபகரிக்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது. இப்பொது அடையாளத்துக்குள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே ,13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது கள நிலவரங்களுக்குப் பொருந்தாது. இது,அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை இல்லை. எனவே, தீர்வு தொடர்பில் எவரும், எழுமாந்தமாகப் பேசக்கூடாது.
வடக்கும், கிழக்கும் பிரிந்த மாகாணங்களாகவே இருப்பதானால், குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன, கபடத்தனமாக பறிக்கப்பட்டன. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படுவது அவசியம். மட்டுமல்ல காணிகளின் எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டன.
மட்டக்களப்பில், முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இவ்விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.