கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஜப்பானுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமையில் எம்மிடமுள்ள ஏதேனும் சொத்துக்களை விற்றேனும் அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க வேண்டியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டு சபையுடன் திங்கட்கிழமை (டிச.05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஜப்பானுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் , ஜப்பான் மறுத்தால் மாத்திரமே ஏனையோருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
அமைச்சரவையில் இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. எவ்வாறிருப்பினும் நாம் எம்வசமுள்ள சொத்துக்களில் ஏதேனுமொன்றை விற்பனை செய்யாவிட்டால் , எமது நாட்டுக்கு உலகலாவிய ரீதியில் அன்றாட கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் வரவு - செலவு திட்டத்தில் காணப்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரச நிறுவனங்கள் பல தனியார் மயப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது எமது அந்நிய செலாவணி இருப்பை 3 பில்லியன் டொலர் வரை அதிகரிக்காவிட்டால் , எமது வங்கிளால் வழங்கப்படும் கடன் சான்று பத்திரங்கள் உலகலாவிய மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. அவ்வாறு அவை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் எம்மால் எரிபொருள் , எரிவாயு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய முடியாது.
கடந்த வாரம் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தினால் நீண்ட கால கடன் தொடர்பில் இலங்கை மேலும் ஒரு படி தரமிறக்கப்பட்டுள்ளது. யார் ஆட்சி செய்தாலும் யார்த்தமான இந்த நிலைமையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஏதேனும் எம்மிடமுள்ள சொத்துக்களை விற்றேனும் இந்த டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால் எம்மால் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. எனவே துரிதமாகவும் பொறுப்புடன் எவ்வாறேனும் அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்