கத்தார் 2022 உலகக் கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் என ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட நட்சத்திரம் லயனல் மெஸி உறுதிப்படுத்தியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு ஆர்ஜென்டீன அணி தகுதி பெற்றுள்ள நிலையில் அணித்தலைவர் மெஸி இதைத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற குரோஷியாவுடனான அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீன 3:0 விகிதத்தில் வெற்றியீட்டியது. பெனல்ட்டி மூலம் மெஸி கோல் புகுத்தியதுடன், ஜூலியன் அல்வாரெஸ் அடித்த ஆர்ஜென்டீனாவின் 3 ஆவது கோலுக்கு மெஸி அபார பங்காற்றியிருந்தார்.
தனது 5 ஆவது உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடும் மெஸி, இதுவரை 11 கோல்களை அடித்து ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கிறார்.
1986 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் ஆர்ஜென்டீனாவை உலகக்கிண்ண சம்பியனாக்குவதற்கு 35 வயதான லயனல் மெஸி முயற்சிக்கிறார்.
இந்நிலையில், ஆர்ஜென்டீனாவின் ஊடகமான டியாரியோ டிபோர்ட்டிவோ ஒலேவிடம் லயனல் மெஸி கூறுகையில், 'இறுதிப்போட்டியொன்றில் விளையாடுவதன் மூலம் எனது உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவு செய்து குறித்து மகிழ்ச்சியடைகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்தற்கு (அடுத்த உலகக்கிண்ண சுற்றுப்போட்டிக்கு) பல வருடங்கள் உள்ளன. அதில் பங்குபற்ற முடியும் என நான் எண்ணவில்லை. இது போன்று நிறைவு செய்வது மிகச்சிறப்பானது' எனவும் மெஸி கூறியுள்ளார்.