கர்ணன் நல்லவர். சிறந்த கொடையாளி. ஆனாலும், துரியோதனன் பக்கம் நின்றதால் அவரை வதம் செய்ய வேண்டிய நிலை கிருஷ்ண பகவானுக்கு ஏற்பட்டது.
அதுபோலவே ரணில் விக்ரமசிங்க நல்லவர். சிறந்த அறிவாளி. ஆனாலும், அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவே தான் தர்மத்தின் வழி சென்று, அவரை நாம் எதிர்க்கின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வட்டவளையில் இன்று திங்கட்கிழமை (டிச. 5) இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு வருவதற்கு ராஜபக்ஷ குடும்பமே பிரதான காரணம். சீனாவிடமிருந்து பெருந்தொகை கடன் பெற்று, அவை தேவையற்ற அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
காலியில் ஒரு துறைமுகம் இருக்கும் நிலையில், அதனை மேம்படுத்தாமல் அம்பாந்தோட்டையில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இதனால் என்ன பயன்?
போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட மாட்டாது என பிரதமரான பின்னர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். ஆனால், ஜனாதிபதியான பிறகு மறுநொடியே போராட்டக்காரர்களை அகற்றினார்.
சொல் ஒன்று செயல் வேறு வடிவம் என்பதை அவர் நிரூபித்தார். உண்மையின் வழி நிற்கவில்லை.
கர்ணன் சிறந்தவர், நல்ல கொடையாளி, துரியோதனன் கூட்டத்துடன் நின்றதால் அவர் வதம் செய்யப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்கவும் தற்போது இருக்கும் இடம் சரியில்லை. நாம் தர்மத்தின் பக்கம்தான் நிற்போம். ரணிலும் மஹிந்தவும் தர்மம் செய்யவில்லை. எனவே, தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும்.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், தேர்தல் அவசியம். அதேவேளை, மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படும்.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒன்றிணைந்து பயணிப்போம். அதற்கான சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் விஜயசந்திரன் ஈடுபட்டுள்ளார் என்றார்.