Our Feeds


Friday, December 16, 2022

ShortNews Admin

அரபு, முஸ்லிம் நாடுகளை பகைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை - நாடு சார்பாக ஓமானிடம் மன்னிப்புக் கோருகிறேன் - அமைச்சர் மனுஷ நாணயக்கார



சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அண்மைக்காலமாக பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் பிழையான செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்தும் வெளியிட்டிருந்தமை வன்மையாக கண்டிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. ஓமானில் மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று அங்கு சென்றுள்ளனர். இந்தக் குழுவில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகளும், மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர், ஒரு பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த மனிதக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் குறித்து அறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தினை முன்னெடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏனெனில் அவர்கள் மூலம் தான் இந்த மனிதக் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட ஏனைய நபர்களை கண்டறியலாம்.

வெளிநாட்டுக்கு சென்றவர்கள் அங்கிருந்து வீடியோக்கள் மூலம் அல்லது தொலைபேசி ஊடாக அல்லது ஊடகங்கள் முன்னிலையில் வந்து பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள். அவை உண்மையா இல்லையா என ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் அதனை வெளியிடுகிறார்கள். அது தொடர்பில் ஆராய நாம் குழுவொன்றினை அனுப்பியிருக்கிறோம் அது வேறு கதை..

இந்தப் பெண்கள், வேலை செய்த இடம் தொடர்பில் வேலை தொடர்பில் குறித்த நாடு தொடர்பில் ஓமான் தொடர்பில், ஓமான் அரசு மக்கள் மீது, ஓமான் அரச தலைவர்கள் மீது மிகவும் கொடூரமான விதத்திலான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

இவைகள் உண்மையா இல்லையா? விசாரணைத் தன்மைகள் அறியாது இவற்றினை பிரபல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. அதன் பிரதிபலனாக மத்திய கிழக்கு நாடுகள் பல இது தொடர்பில் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அது தவிர ஊடகங்கள் பொதுவாக அறிக்கையிட்ட ஒன்று தான் ஓமான் தூதுவராலயம் என்று.. ஓமான் தூதுவராலயம் இருப்பது இலங்கையில், ஓமானில் இருப்பது இலங்கை தூதுவராலயம். ஓமானில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயம் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் இப்படி ஓமான் தூதுவராலயம் என்று செய்திகள், பத்திரிகை கண்ணோட்டங்களில் கூறி ஓமான் நாடும் பெரிதும் அதிருப்தியினை வெளியிட்டுள்ளது. இது பாரியதொரு பிரச்சினை.

இலங்கைக்கு பிரதானமாக வெளிநாட்டவர்களால் நிதி வருவதும் எமக்கு மிகவும் பக்கபலமாக இருப்பதும் மத்திய கிழக்கு நாடுகளால் தான். இப்போது ஓமான் அரசின் மேலுள்ள இந்த பழிக்கு, துபாய், சவூதி மற்றும் ஏனைய அரசுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. ஏனெனில் இந்த அனைத்து இராச்சியங்களிலும் உள்ள சட்டங்கள் அனைத்தும் சமனானது.

இவர்கள், வலுக்கட்டாயமாக வேலையினை விட்டு வந்தால் அந்த அரசு பொறுப்பல்ல. அந்த அரசு செய்த குற்றமும் இல்லை. ஆனால் ஓமான் செய்யாத தப்புக்கு ஓமான் அரசு குறித்து அவர்கள் செய்தி வெளியிட்டிருந்தனர். அதற்காக நான் அனைத்து எமது ஊடகங்கள் சார்பாகவும் நாடு சார்பாகவும் மன்னிப்புக் கோருகிறேன். ஏனெனில் அந்த நாடுகளுடைய நெடுங்கால உறவினை பகைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை..”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »