பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மிகவும் அபாயகரமான நிலையிலுள்ளதாக வகைப்படுத்தியுள்ளதாகவும், இந்த அவதானம் குறித்து 2020 ஆம் ஆண்டு முதலே எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டிய போதிலும் அப்போதைய ஆட்சியாளர்கள் அதனை கேலி செய்து நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும், இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
யார் என்ன சொன்னாலும் சர்வதேச, உள்நாட்டு கவனம் இந்த விடயத்தில் செலுத்தப்படவில்லை எனவும் அமெரிக்கா தலைமையிலான பல மேற்கத்திய நாடுகள் எமது நாட்டில் அரசியல் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் வரை எந்த வித உதவிகளையும் செய்வதில்லலை என கூறியுள்ளதை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், 8 மாதங்களில் 477 மருத்துவர்களும் 300 பொறியியலாளர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும், சுகாதாரத்துறையில் மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகள் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு தேர்தல் மூலம் புதிய மக்கள் ஆணையைப் பெறுவதுதான் எனவும் தெரிவித்தார்.