பயனர்களின் பயன்பாட்டிற்காக புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் பல கோடி பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வட்ஸ்அப் செயலி அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அதன்படி பயனர்களின் உபயோகத்திற்காக புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த முறை வெளியான புதிய வசதியான தனக்கு தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் முறையை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை ஒருமுறை மட்டுமே வாசிக்கும் வகையிலான புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.