(எம்.எப்.எம்.பஸீர்)
அம்பாந்தோட்டை - சூரியவெவ பகுதியில் சிறார்களிடையே மந்த போசன நிலைமை அதிகளவில் காணப்படுவதாக வெளிப்படுத்தியமையால், பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் வைத்தியர் கலாநிதி ஜி.ஜி. சமல் சஞ்ஜீவ உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் இன்று (14) அறிவித்தது.
சட்டத்தரணி பிரவீன் பிரேமதில ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹார, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினரால் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பிலான சம்மேளனத்தின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்ஜீவ, அம்பாந்தோட்டை - சூரிய வெவ சிறுவர்களின் போசனை நிலைமை தொடர்பில் வெளிப்படுத்தல்களை செய்தமையால் தன்னை சுகாதார அதிகாரிகள் பணி இடை நிறுத்தம் செய்தமை அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என அறிவிக்குமாறு உயர் நீதிமன்றை கோரியுள்ளார். அர்த்துடன் தனது அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக 100 இலட்சம் ரூபாவை நட்ட ஈடாக பெற்றுத்தருமாறும் அவர் கோரியுள்ளார்.
இந்த மனுவில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 23 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பிரகாரம் கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக் குழு தன்னை பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை - சூரியவெவ பிரதேசத்தில் வைத்திய முகாமொன்றை ஏற்பாடு செய்து அப்பிரதேசத்தில் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு தொடர்பில் தான் கணக்கெடுப்பு நடத்தியதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.
மருத்துவ முகாமில் பங்கேற்ற ஒவ்வொரு 20 குழந்தைகளில் 6 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், பங்கேற்ற குழந்தைகளில் 50 முதல் 80 சதவீதம் பேர் எடை குறைவாக இருப்பதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தான் கூறிய கருத்து ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பரப்பப்பட்டதாக குறிப்பிடும் மனுதாரர், அதன் பின்னர் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வழங்கிய அறிவித்தல் பிரகாரம், கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி சுகாதார அமைச்சின் விசேட விசாரணைக் குழுவிடம் சென்று வாக்குமூலம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவன சட்டக் கோவை பிரிவு 31:1:15 இனை தான் மீறியதாகக் குற்றம் சாட்டி, எந்த நியாயமான காரணமும் இன்றி, பிரதிவாதிகள் தன்னை பணி இடைநீக்கம் செய்தனர் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், தன்னை பணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு பிரதிவாதிகள் எடுத்த முடிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றை இம்மனு ஊடாக கோரியுள்ளார்.
அத்துடன் தன்னை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டுப் பயிற்சியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.