(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சட்டத்தின் 26 ஆவது உறுப்புரைக்கமைய வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை இம்மாதத்தின் இறுதி வாரத்தில் அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாண்டுக்கான முதலாவது, இரண்டாவது குறைநிரப்பு பட்டியல்களுக்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தின் தேருநர்களின் எண்ணிக்கையும் , அரசியலமைப்பின் 98 ஆவது உறுப்புரையின் 8 ஆவது உப பிரிவிற்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் 19 , கம்பஹாவில் 18, குருணாகலில் 15, கண்டியில் 12, இரத்தினபுரியில் களுத்துறையில் 10, காலி, அநுராதபுரம், கேகாலை மற்றும் பதுளை ஆகிய தொகுதிகளில் தலா 9, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 8 என தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று மாத்தறை, அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம் மற்றும் திகாமடுல்லை ஆகிய தொகுதிகளில் தலா 7 உறுப்பினர்களையும் , வன்னி மற்றும் மொனராகலையில் தலா 6 உறுப்பினர்களையும் , மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய தொகுதிகளுக்கு தலா 5 உறுப்பினர்களையும் தெரிவு செய்ய முடியும். மேலும் திருகோணமலை தொகுதியில் 4 உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.