Our Feeds


Tuesday, December 6, 2022

ShortNews Admin

புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் - நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ



(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)


சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தின் போது சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அவதானம்  செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்   டலஸ் அழகபெரும  முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

விடுதலை புலிகள் அமைப்புடுன் தொடர்புடையதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு  காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் 400 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்போது நான் நீதியமைச்சராக பதவி வகித்த போது சிறைச்சாலைகளில் இருந்த விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 110 ஆக குறைக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கமைய கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் விசேட மேல நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வழக்கு எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 31 பேர் உள்ளார்கள் இவர்களில் 16 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையிலும் 15 பேர் சந்தேகத்தின் அடிப்படையிலும் தடுத்து  வைக்கப்பட்டுள்ளார்கள்.

சிறையில் உள்ள விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில்  உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடயங்களை பெற்றுக்கொண்டு, சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு விசேட குழுவை அமைத்து சிறை கைதிகளின் வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் அனுமதியுடன் அவர்களை  விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »