(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? மின் கட்டணத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது மனிதாபிமானத்துடன் செயற்பட நடவடிக்கை எடுக்குமா என்பதை தெரிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச.05) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது,
அரசாங்கம் மின் கட்டணத்தை ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் இரண்டு கடடங்களாக மின் கட்டணம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனை மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாது. தற்போது மக்களுக்கு மின்சாரம் தாக்கி இருக்கின்றது. உயர்தர பரீட்சை இடம்பெற இருக்கும் நிலையில் இதனை எந்த அடிப்படையில் செய்யப்போகின்றது.
அதேபோன்று மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? மின் கட்டணத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது மனிதாபிமானத்துடன் செயற்பட நடவடிக்கை எடுக்குமா என்பதை தெரிவிக்கவேண்டும்.
அத்துடன், அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் வங்குரோத்து அடைந்துள்ள ஸ்ரீலன்கன் எயார்லைன்ஸுக்கு மேலும் 11 விமானங்களை கொள்வனவு செய்யப்போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மின்சார கட்டணங்களின் விலை அதிகரிப்பது இவ்வாறான வீண்விரயமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கா என கேட்கின்றேன்.
எனவே, மின் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி செலவுகள் அதிகரிக்கப்படும்.
அதன் காரணமாக எமது ஏற்றுமதி வியாபாரம் பாதிக்கப்படும். மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதால் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அதிகரிக்கப்பட்டால் மக்கள் எவ்வாறு வாழ்வது. மக்கள் தொடர்பில் சந்திக்காமல் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு மனசாட்சி இல்லையா என கேட்கின்றேன்
அதேபோன்று மின்சார சபையை 8ஆக பிரிக்கப்போவதாக தெரியவருகின்றது. இதன் மூலம் மின் நிலையங்களை விற்பனை செய்யப்போவதாகவே அறியக்கிடைக்கின்றது என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, மின்சாரசபையை 8 பிரிவுகளாக பிரிக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றது.
இவ்வாறு அரச வளங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இருக்கிறதா? தேசிய வளங்களை விறபனை பாதுகாப்பதாக தெவித்து ஆட்சிக்கு அந்த இவர்கள் தற்போது மின்சார சபையை 8 பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்ய தீர்மானித்திருக்கின்றது. இதனை எவ்வாறு செய்ய முடியும்.? என்றார்.
இதற்கு சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை அடிப்படையாகக்கொண்டு கேள்வி கேட்கவேண்டாம். இதுதொடர்பாக அமைச்சரவையிலும் கலந்துரையாடப்படவில்லை என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல, பத்திரிகையில் வந்த விடயத்தை அடிப்படையாக்கொண்டு நாங்கள் கேட்கில்லை. மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் குழுவின் நானும் இருக்கின்றேன். அந்த குழுவிலேயே அமைச்சர் காஞ்சன இந்த விடயத்தை தெரிவித்தார் என்றார்.
இறுதியாக அமைச்சர் சுசில் பதிலளிக்கையில், இந்த விடயங்கள் தொடர்பாக மின்சக்தி அமைச்சருக்கு அறிவுறுத்தி, அமைச்சின் கூற்றொன்றை இன்று சபைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கின்றேன் என்றார்.