இலங்கையில் மருந்துகள் மருத்துவ பொருட்களிற்கான தட்டுப்பாடு நாளாந்தம் மோசமானதாகி வருகின்றது என அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு, இதய, சிறுநீரக, புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலை தற்போது அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ள இலங்கை தாதிமார் சங்கம் இதனால் ஏற்படும் மரணங்கள் மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட மரணங்கள் என பதிவுசெய்யப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
மருந்து மருத்துவ பொருட்களிற்கான தட்டுபாடு பொதுவான விடயமாகிவிட்டது,மிகவும் பாரதூரமான நோய்களிற்காக வழங்கப்படும் மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லை என அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் நோயாளிகள் ஐந்து வகையான மருந்துகளை பயன்படுத்தவேண்டும் என தெரிவித்தால் அதில் இரண்டு அல்லது மூன்றையே வைத்தியசாலைகள் தற்போது வழங்குகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மருந்துகளை நோயாளிகள் மருந்தகங்களில் இருந்து கொள்வனவு செய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது ஆனால் அங்கு அந்த மருந்துகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் மருந்துகளை உரிய முறையில் வழங்காததாலும் நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாலும் மேற்கூறப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது, என அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் அம்பாந்தோட்டை அம்பாறை மாவட்டங்களில் மருந்துகளை பெற முடியாததன் காரணமாக நோயாளிகள் மரணிக்கும் துயரம் அதிகமாக இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு மருந்துகளை வழங்கும் மருந்தகங்கள் பல மருத்துவமனைகளில் உள்ளன,ஆனால் இங்கு மட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளே உள்ளன,இதன் காரணமாக நோயாளிகளின் நிலை மோசமடைந்து அவர்கள் உயிரிழக்கின்றனர் ஆனால் பிரதேச பரிசோதனை அறிக்கையில் மருந்து எடுக்காததால் உயிரிழப்பு என தெரிவிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகள் இல்லாததால் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தெளிவாகின்றது இது குறித்த புள்ளிவிபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் நோய் அதிகரிப்பினால் உயிரிழப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டாலும் உண்மையான காரணம் நோயாளர்கள் மருந்துகளை உரிய விதத்தில் உரிய தருணத்தில் எடுப்பதில்லை என்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.