ஹொரணை பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதியிடம் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்ட 12 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
சிறுவர் உரிமைகளுக்காக வாதிட்ட சட்டத்தரணி சதானி திஸாநாயக்க திறந்த நீதிமன்றில் இது தொடர்பில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், இந்த மரணம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட மில்லனிய பொலிஸ் குற்றப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் உட்பட மரணம் தொடர்பாக சாட்சியமளித்த அனைவரின் சாட்சியப் பதிவுகள் மற்றும் விசாரணையின் முன்னேற்றத்தை இம்மாதம் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.