மழையுடனான காலநிலை மாற்றமடைந்துள்ளதன் காரணமாக தற்போது 75 சதவீதமாகக் காணப்படும் நீர் மின் உற்பத்தி வரும் நாட்களில் படிப்படியாகக் குறைவடையும்.
லக் விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி உரிய நேரத்தில் இறக்குமதி செய்யப்படாவிட்டால் இனிவரும் நாட்களில் நீண்ட நேர மின் விநியோக தடைகள் ஏற்படக் கூடும் என மின்சாரசபை ஊழியர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (lடிச. 15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
லக் விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இதுவரையிலும் இறக்குமதி செய்யப்படவில்லை. தற்போது ஐந்தாவது கப்பலிலிருந்து நிலக்கரி தரையிறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
லக் விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவு செய்யப்படவில்லை என்றால், கருப்பு ஜூலை என இதற்கு முன்னர் எம்மால் விடுக்கப்பட்ட அறிவிப்பு கருப்பு மார்ச் ஆகக் கூடும்.
நிலக்கரியை இறக்குமதி செய்யாமல், மின் கட்டணத்தை அதிகரிப்பதால் மாத்திரம் எவ்வாறு மின்சாரத்தை விநியோகிப்பது? மறுசீரமைப்பு என்ற பெயரில் மின் கட்டணத்தை அதிகரித்து மின்சாரசபையையும் விற்பனை செய்வதற்கே முயற்சிக்கின்றனர். மக்களிடமிருந்து அதிக கட்டணத்தை அறவிட்டு , அந்த பணத்தைக் கொண்டு இயந்திரங்களை இயக்க முடியாது. இயந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி கொள்வனவு செய்யப்பட வேண்டும்.
கடந்த வருடங்களில் மழை காலநிலை மாற்றமடையும் காலப்பகுதியில் அதாவது டிசம்பர் மாதங்களில் நிலக்கரி கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வந்தன. தடையின்றி மின் விநியோகத்தை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 24 கப்பல்களாவது வரவழைக்கப்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் இந்த நிலைமையிலிருந்து மீள முடியாது என்றார்.