ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோவின் தலைவரை சந்தித்தமை குறித்த விபரங்களை இலங்கையின் தேசிய பாதுகாப்பு பேரவைக்கு மாத்திரமே தெரிவிக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ரோ தலைவரின் இலங்கை விஜயம் குறித்து செய்தியாளர்கள் வாராந்தர அமைச்சரவை மாநாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமும் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் பல குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் என்னை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் நான் அது குறித்து உரியவர்களிற்கே தகவல் வழங்குவேன் என ஜனாதிபதி என்னிடம் தெரிவித்துள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுசேவை அல்லது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான எந்த தகவல்களையும் தேசிய பாதுகாப்பு சேவையின் வாராந்த கூட்டத்திலேயே வெளியிட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.