மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் நேற்று (11) இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 பேர், 01 கிராம் மற்றும் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேக நபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 04 கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், கஞ்சாவுடன் கலக்கப்பட்ட 02 கிலோ 72 கிராம் மாவா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை இன்று (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.