பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் தாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய 11 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய அனைவரும் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடியவையல்ல என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் தாக்கப்பட்ட விவகாரம் எவ்வாறு ஆரம்பித்தது என்பது தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இது முழு பல்கலைக்கழக கட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலாகும்.
எனவே இவ்விவகாரம் தொடர்பில் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் சேவையாற்றும் எந்தவொரு தரப்பினருக்கும் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாக இனியொரு போதும் இடமளிக்கப்படக் கூடாது.
இதனுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் , எதிர்வரும் காலங்களில் எம்மால் பல்கலைக்கழக கட்டமைப்பை நிர்வகிக்க முடியாத நிலைமை ஏற்படும்.
பகிடிவதைகளுக்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்குள் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் பிரதி பலனாகவே இவ்வாறான செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகின்றனர். எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் இது பகிடிவதைகளில் இறுதி காலமாகும் என்றார்.