அனுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சைக்காக கல்வி வலய காரியாலயத்தினால் அச்சிடப்பட்ட 10ஆம் தர கணித வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகியுள்ளதாக அனுராதபுரம் கல்வி வலய வலய பணிப்பாளர் திருமதி மஹேஷா மஞ்சரிகா ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதன் காரணமாக பரீட்சையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
10ஆம் தர மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்காக இந்த கணித வினாத்தாள் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களாக அச்சிடப்பட்டு பாடசாலைகளில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அனுராதபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் இன்று கணித பாடத்திற்கு தோற்றவிருந்தனர். ஆனால் பரீட்சைக்கு முன்னதாகவே கணித வினாத்தாள் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் ஊடாக மாணவர்களிடம் சென்றடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.