மலையக மக்களின் வீடு, காணி, சம்பளம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணி தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கத் தயார் என வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கமத்தொழில் அமைச்சு,நீர்ப்பாசன அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2021 மே 6ஆம் திகதி இரசாயன உரத்திற்கு தடை செய்து வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் மூலம் நாட்டுக்கு இடி விழுந்தது என்றே கூற வேண்டும்.
காலில் முள் குத்தினால் அதனை எடுத்தெறிய வேண்டும். அதேபோன்று தவறு நடக்கும் போது அதை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைப் போன்று நீண்ட காலமாக நாட்டில் தொடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அது ஒரு சிறந்த வரவேற்கக் கூடிய விடயம். எனினும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுடனேயே மலையக மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கான வசதிகளும் இல்லாமல் போயுள்ளன.
நெல் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் உரம் மற்றும் கிருமி நாசினிகள் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான மக்கள் தற்போது விவசாய நடவடிக்கைகளை கைவிடும் நிலை உருவாகியுள்ளது. பெரும் செலவிலேயே உரம் வாங்க வேண்டிய இருக்கின்றது. முன்னர் 4ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடிந்த கிருமிநாசினியை தற்போது 14ஆயிரம் ரூபா கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் எவ்வாறு மரக்கறி பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும்?.
மேலும் மலையக மக்களுக்கு வீடுகள் இல்லை. வீடுகளை நிர்மாணிப்பதற்காக காணிகளும் இல்லை. தோட்ட மக்களின் காணிகளை தோட்ட கம்பனிகள் அபகரிக்கும் நிலையே தற்போது அங்கு உருவாகியுள்ளது. இத்தகைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதனால் மலையக மக்களின் வீடு, காணி, சம்பளம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை தீர்க்கப்பட்டால் ஜனாதிபதிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. அவரது சிறந்த வேலைத் திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார். எனினும் அவர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.