(எம்.மனோசித்ரா)
தூய பண்டாரநாயக்க கொள்கைகளை மதித்து அதற்கேற்ப அரசியலில் ஈடுபடும் எந்தவொரு அரசியல் குழுவிற்கும் அறிவுரை வழங்க நான் தயங்குவதில்லை. அதன் அடிப்படையிலேயே குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் தனது ஆலோசனையை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாக பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பவாதத்திற்காகவும் , குறுகிய நோக்கத்திற்காகவும் கட்சியை அப்பட்டமாகக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் , தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்திலும் உறுதியேற்பேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சி மாறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் , அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :
நான் ஐக்கிய தேசிய கட்சியுடனும் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக வெ வ்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு , வேறு எந்தவொரு கட்சியிலும் நான் இணையப் போவதில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் பிறந்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலாகும். வளர்ந்ததும் சுதந்திர கட்சியிலேயே ஆகும். வெ வ்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானதும் சுதந்திர கட்சியிலேயே ஆகும். இறுதியாக, நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இறக்கவும் எதிர்பார்க்கின்றேன்.
வெ வ்வேறு தவறான கொள்கைகளை பின்பற்றியமையின் காரணமாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பண்டாரநாயக்க தத்துவத்தைப் மதிக்கின்ற , தெளிவான பாதையில் நான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அந்தத் தத்துவத்தை ஏற்று அதற்கேற்ப அரசியலில் ஈடுபடும் எந்த ஒரு அரசியல் குழுவிற்கும் அறிவுரை வழங்க நான் தயங்குவதில்லை.
தற்போது நம் நாடு எதிர்கொள்ளும் இரண்டு தேசிய நெருக்கடிகளான குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் எனது ஆலோசனையை வழங்குகிறேன்.
தற்போதைய சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தமது சந்தர்ப்பவாதத்திற்காகவும் குறுகிய நன்மைகளுக்காகவும் கட்சிக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் வேளையில், உண்மையான சுதந்திரக் கட்சிக்காக தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் உறுதியேற்பேன் என்பதை வலியுறுத்துகிறேன்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.