மோட்டார் சைக்கிளின் ஒற்றைச் சக்கரத்தில் சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இளைஞர்கள் ஹொரண நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா அபராதம் விதித்ததுடன், அவர்களின் சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தவும் நீதிவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
மொரகஹஹேன, ஹொரணை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆறு இளைஞர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
மொரகஹஹேன, ஒலொபொடுவ நவம் மாவத்தை பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று ஒற்றைச் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு இடையூறாகவும், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதாக மொரகஹஹேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் தீர்ப்பளித்த நீதிவான், மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, பிள்ளைகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் எச்சரித்தார்.