பொதுமக்கள் நெருக்கடியில் உள்ள இந்த சமயத்தில், மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் விதமாக மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால், அதனை ஒட்டுமொத்த மக்களையும் இணைத்து தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும், சட்ட விரோதமாக மின்கட்டணத்தை உயர்த்தினால், கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க தங்கள் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 75 வீத மின்கட்டண அதிகரிப்பால் சிறு தொழிலதிபர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீண்டுமொரு மின் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவையும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும், ஆனால் ஜனாதிபதியும் மினசார அமைச்சரும் மக்கள் பிரச்சினைகளில் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.