வடகொரியாவில் உள்ள குழந்தைகளுக்கு துப்பாக்கி, வெடிகுண்டு என பெயர்களை மாற்றி வைக்கும்படி, அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு வன்முறையைத் தூண்டும் வகையில் பேர் வைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தினால், நிச்சயம் அது பெற்றோருக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும். வடகொரியாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறார் ஜனாதிபதி கிம் ஜோங் உன்.
அணு ஆயுத சோதனைகளால் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நாடு வட கொரியா. பார்ப்பதற்கு குழந்தைத்தனமான முகத்தோடு இருந்தாலும், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன், எப்போதுமே அதிரடி உத்தரவுகளுக்கு பேர் போனவர். இப்போதும் அப்படித்தான் வித்தியாசமான அதிர்ச்சி அளிக்கும் வகையிலான உத்தரவு ஒன்றைத் தன் நாட்டு மக்களுக்கு அளித்துள்ளார்.
அதாவது, வடகொரியாவில் உள்ள குழந்தைகளுக்கு மென்மையான பெயர்களை வைப்பதற்கு பதிலாக இனி, போக் இல் (வெடிகுண்டு), சோங் இல் (துப்பாக்கி), உய் சாங் (செயற்கைக்கோள்) என ஆயுதங்களின் பெயர்களையே சூட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பெயர்களை அவர் தேசபக்தியின் வெளிப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூடவே ஹெர்மிட் இராச்சியத்தின் எ ரி (நேசிப்பவர்) சோ ரா (சங்கு ஷெல்) மற்றும் சு மி (சூப்பர் பியூட்டி) போன்ற மென்மையான பெயர்கள் வைப்பதையும் வட கொரியா மக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என கிம் உத்தரவிட்டுள்ளார். இந்த வருடத்தின் இறுதிக்குள் வடகொரியா மக்கள் தங்கள் பெயரை இப்படி புரட்சிகரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அல்லது மதிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது மோசமான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியும், கோபமும் அடைய வைத்துள்ளது. அரசின் வசதிக்கேற்ப இப்படி பெயரை மாற்ற நிர்ப்பந்திப்பது சரியல்ல என சிலர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.