Our Feeds


Monday, December 5, 2022

News Editor

வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் : 6 வீடுகள் டொலருக்கு விற்பனை


 

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 6 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

டுபாய், அமெரிக்கா, கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்வனவுக்காக கடந்த இரண்டு மாதங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வெளிநாட்டு நாணயக் கணக்கில் 276,650 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார். மேலும், குறிப்பிட்ட டொலர் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தினால் 10 சதவீதம் விலைக்கழிவும் பெறுவார்கள்.

பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இன்னும் பத்து வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, டொலர்களுக்கு வீடுகளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள் சுமார் 352,800 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடந்த செப்டெம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கு முடியுமானளவு ஏற்பாடுகளைச் செய்தார்.

இதன்படி டொலர்களுக்கு வீடுகளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்ட முதலாவது வீடு கடந்த செப்டெம்பர் மாதம்   டுபாயில் வசிக்கும் இலங்கை ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடு  வியத்புர வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ளது.

டொலருக்கு வீடுகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.uda.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் மேலதிக தகவல்கள் மற்றும் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 077-7794016 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »