சீனா நிர்மாணித்த விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த சீன விண்வெளி வீரர்கள் மூவர் நேற்றிரவு பூமிக்குத் திரும்பினர்.
சேன் டோங், லியு யாங், காய் ஸுஸே ஆகியோரே இவ்வாறு பூமிக்குத் திரும்பினர். இவர்களில் லியூ யாங் சீனாவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவரும், கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, சீனாவின் தியான்கோங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தனர்.
இவர்களை ஏற்றிவந்த, விண்கலம் சீனாவிலுள்ள உள் மொங்கோலியா சுயாட்சிப் பிராந்தியத்திலுள்ள டோங்பெங் விண்வெளி தளத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. இம்மூவரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
சீனாவின் ஏனைய 3 விண்வெளி வீரர்கள் கடந்த மாத இறுதியில் சீன விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், மேற்படி மூவரும் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
சீனாவுடன் இணைந்து செயற்படுவதற்கு நாசாவுக்கு அமெரிக்கா 2011 ஆம் ஆண்டு தடை விதித்ததால். சர்வதேச விண்வெளி நிலைய செயற்பாடுகளிலிருந்து சீனா விலக்கப்பட்டது. அதன்பின் தியான்கோங் எனும் தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கையை சீனா ஆரம்பித்தது.
ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய 3 ஆவது நாடு சீனா ஆகும்.