பிரேஸிலில் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தபட்சம் இருவர் உயிரிந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
அதேவேளை, நெடுஞ்சாலையொன்றின் ஒரு பகுதி மண்சரிவினால் மூடப்பட்டதுடன், 20 கார்கள். லொறிகள் உட்பட பல வாகனங்கள் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.
பிரேஸிலின் தென் பிராந்திய மாநிலமான பரானாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
உள்ளூர் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், 'எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. ஒரு வாகனத்துக்குள் 5 பேரும் இருக்க முடியும். 30 முதல் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என மதிப்பிட்டுள்ளோம்' என்றார்.
பரானா மாநில பாதுகாப்புத்துறையினர் இது தொடர்பாக கூறுகையில், மீட்பு நடவடிக்கையில் 55 தீயணைப்பு வீரர்கள் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அயலிலுள்ள குவாரதுபா நகரின் நகரமொன்றின் மேயர் உட்பட 6 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'எம் மீது மலை வீழ்ந்தது. அது ஒவ்வொரு காரையும் அடித்துச் சென்றது. இறைவனின் கருணையால் நாம் உயிருடன் உள்ளோம்' என குவாரதுபா மேயர் ரொர்ட்டோ ஜஸ்டஸ் கூறியுள்ளார்.