அதிநவீன குண்டுவீச்சு விமானமொன்றை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. B-21 Raider எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் அணுவாயுதங்கள் மற்றும் பாரம்பரிய ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.
விமானத்தில் ஆட்கள் எவரும் இல்லாமலும் பறக்கக்கூடிய வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல தசாப்தகாலங்களின் பின்னர், அமெரிக்கா வடிவமைத்த முதலாவது குண்டுவீச்சு விமானம் இதுவாகும்.
நோர்த்ரோப் கிரம்மன் எனும் நிறுவனத்தினால் இவ்விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு பி-21 ரைடர் விமானத்துக்கான செலவு 700 மில்லியன் டொலர்கள் (சுமார் 26,000 கோடி இலங்கை ரூபா/ சுமார் 5700 கோடி , இந்திய ரூபா) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்திலுள்ள, நோர்த்ரோப் கிரம்மன் நிலையமொன்றில் கடந்த வார இறுதியில் இவ்விமானம் முதல்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் ஆஸ்டின் இந்நிகழ்வில் பேசுகையில், அமெரிக்காவின் தொடரும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும், மதிநுட்பத்துக்கும், புத்தாக்கத்துக்குமான சாட்சியமாக இவ்விமானம் விளங்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.