மலேஷியாவின் அமைச்சரவை அமைச்சர்கள் தமது சம்பளத்தில் 20 சதவீதத்தை குறைத்துக்கொள்வதற்கு இணங்கியுள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவின் புதிய பிரதமரான அன்வர் இப்ராஹிம், தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நேற்று திங்கட்கிழமை நடத்தினார்.
அதன்பின் பிரதமர அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காரணமாக சம்பளத்தை குறைத்துக்கொள்ள அமைச்சர்கள் இணங்கினர் என அவர் கூறினார். நிதி அமைச்சராகவும் அன்வர் இப்ராஹிம் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது,
"பொருளாதாரம் மீட்சியடையயும் வரை இது நீடிக்கும். 3 வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்தால் இது குறித்து நாம் மீளாய்வு செய்வோம். சம்பளத்தைக் குறைப்பது பொருத்தமானதல்ல. எனினும், அவர்கள் தியாகம் செய்ய முன்வந்தமைக்காக நான் நன்றி தெரிவிக்கிறேன்" எனவும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
"பிரதமருக்கான சம்பளத்தை அன்வர் பெறுவதில்லை. அவர் நிதியமைச்சருக்குரிய சம்பளத்தை பெறுகிறார் என சிலர் கூறுகின்றனர். அது சரியானல்ல. ஒரு சம்பளமே வழங்கப்படுகிறது" எனவும் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
மலேஷியாவின் துணைப் பிரதமர்கள் அஹ்மத் ஸாஹித் ஹமிதி, ஃபாதில்லா யூசுப், அரசாங்கத்தின் பிரதம செயலாளர் மொஹட் ஸுகி அலி ஆகியோரும் இச்செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.