தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட சுமார் 4586 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள், கொழும்பு துறைமுகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களே கடந்த 14ம் திகதி கைப்பற்றப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவிக்கின்றது.
128.327 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 106.474 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
29 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட, தங்காலை, நாகுஎழுகமுவ, கொஸ்கொட மற்றும் பலபிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2022ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களிலிருந்து சுமார் 28.05 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.