(எம்.மனோசித்ரா)
போதைப்பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படும் வன்முறைகள், மனித படுகொலைகள், மனித கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்கின்றன.
எந்தவொரு பிரஜையும் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் உயிர் வாழக்கூடிய உரிமையை உறுதி செய்வதற்காக தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படாவிட்டால் 1980 களில் காணப்பட்டதைப் போன்ற மோசமான நிலைமையை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து , செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கையின் வரலாற்றில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதியே மோசமான வன்முறைகள் பதிவாகின. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவரது பாதுகாவலரோடு சித்தரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யுமளவிற்கு அன்றைய தினம் வன்முறைகள் தீவிரமடைந்திருந்தன.
12 மணித்தியாலங்களுக்குள் திட்டமிட்டு 72 பாராளுமன்ற உறுப்பினர்களுடைய வீடுகளுக்கு தீ மூட்டப்பட்டன. இவை தவிர உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 800 க்கும் அதிக மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்களுக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்தி ஜனநாயக விரோ வன்முறைகள் நாட்டில் இடம்பெற்றன.
உலகில் பாராளுமன்ற முறைமை காணப்படும் நாட்டில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான வன்முறைகள் பதிவாகவில்லை. பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட போது , அப்போதைய அந்நாட்டு பிரதமரால் விசேட நீதிமன்றமொன்று நியமிக்கப்பட்டு , கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு குறுகிய காலத்திற்குள் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் தமது நாட்டில் இவ்வாறான வன்முறைகளுக்கு இடமில்லை என்று உலகத்திற்கு சிறந்த முன்னுதாரணம் காண்பிக்கப்பட்டது.
ஆனால் எமது நாட்டில் அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே அண்மைக்காலமாக நாட்டில் போதைப்பொருள் பாவனையும் , அதனை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளும் , மனித படுகொலைகளும் , மனித கடத்தல்களும் பதிவாகி வருகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு அமைச்சரவை கூட்டங்களின் போது தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கியுள்ளார்.
சட்டத்தின் கட்டமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் கட்சி பேதங்களின்றி , சட்டத்தை நடைமுறைப்படுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 11 மற்றும் 14 ஆம் உறுப்புரைகளில் சகல பிரஜைகளுக்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் , தமது வீடுகளில் சுதந்திரமாக வாழ்வதற்காக காணப்படும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தேசிய ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்காவிட்டால் , 80 களில் காணப்பட்டதைப் போன்ற மோசமான சூழலை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்.
நச்சுத் தன்மையுடைய போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதற்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் , பல்கலை மாணவர்கள் உள்ளிட்டோரை இலக்குவைத்து முன்னெடுக்கப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்த செயலணியின் ஊடாக துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்றார்.