குவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதி ஒட்டோ பேரெஸ், ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து, அவருக்கு 16 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான குவாத்தலாமாவின் ஜனாதிபதியாக 2012 ஜனவரியில் ஒட்டோ பேரெஸ் மொலீனா பதவியேற்றிருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக 2015 செப்டெம்பரில் அவர் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அதன்பின் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
கௌதமாலாவின் சுங்க வரி முறைமையை பல மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இம்மோசடியுடன் தொடர்புபட்டவர்கள் 10 மில்லியன் டொலர்கள் மோசடி செய்ததாகவும் 3.5 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி இரேமா ஜெனட் வால்டேஸ், ஒட்டோ பேரெஸுக்கு 16 வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார். ஒட்டோ பேரெஸின் கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்த ரொக்ஸானா பல்டேட்டிக்கும் இதே தண்டனை விதிக்கப்பட்டது.