தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகிய மென்டோஸ் சூறாவளி காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,000 ஐ கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் இக்காலநிலை மாற்றம் இவ்வாரம் சீராகும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை வடமேல் மாகாணத்திலும் , யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடும் காற்று மற்றும் மழையுடனான காலநிலையால் கடந்த 3 நாட்களில் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டங்களில் 4,825 குடும்பங்களைச் சேர்ந்த 16,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை 5 வீடுகள் முழுமையாகவும் 4,385 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கேகாலையில் பாதிப்புக்களுக்கு உள்ளான இரு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் நலன்புரி முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு கடந்த ஓரிரு தினங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிய கடும் குளிருடனான காலநிலை குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மெண்டோஸ் சூறாவளி நாட்டைக் கடந்து சென்றுள்ளமையால் குளிர் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.